counters

Thursday, September 24, 2015

புதிர்

பிரிவு ஆ. கேள்வி-பதில்

1.   பஞ்ச பாண்டவர்களைக் குறிப்பிடவும். ___________________________________________________________.
2.   இராமாயணத்தில் இராமனின் தந்தையின் பெயர்.___________________________
3.   ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுக. ___________________________________________________________________
4.   கொன்றை வேந்தனை இயற்றிவர் யார்? _______________________.
5.   தமிழின் தொன்மையான இலக்கண நூல் யாது? ____________________________.
6.   முக்கனிகள் யாவை? _______________________________
7.   மூவேந்தர் யாவர்? _________________________________________.
8.   முத்தமிழ் யாவை? _________________________________________.
9.   சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்? ____________________________.
10. மகாபாரதத்தில் துரியோதனின் உற்ற நண்பன் யார்? __________________________.
11. பாண்டவர்களை மணந்தவள் யார்? ________________________.
12. ‘கூற்றாயினவாறு’ பாடியவர் யார்? __________________.
13. சமயக்குரவர் நால்வர் யாவர்? __________________________.
14. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை? _______________________.
15. தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? ___________________.
16. இடையின மெய்யெழுத்துகளைக் குறிப்பிடவும். ________________________.
17. ஒரே பொருள் தரும் சொற்களை எழுதுக.
அ. கண் : ______________.
ஆ. உடல்: ______________.
இ. மீன்: _______________.
ஈ. உலகம்: ___________________.
உ. கடல்: ___________________.
ஊ. புகழ்: ________________.
18. அழுக்காறு என்பதபன் பொருள். ____________________________.
19. திருக்குறளில் மொத்தம் எத்தைனைக் குறட்பாக்கள் உள்ளன? _________________.
20. பாரதியாரின் இயற்பெயர் என்ன? _____________________.
21. கம்பராமாயணத்தை எழுதியவர் யார்? _______________.
22. திருமாலின் அவதாரங்கள் எத்தனை? _____________________.
23. தமிழில் முதலெழுத்துகள் எத்தனை? ____________________.
24. இராமனின் மனைவி யார்? _______________.
25. தீபாவளி எந்த அசூரனைக் கொன்றதன் மூலம் கொண்டாடப்படுகிறது? ______________





முயல்க;வெல்க!!!

Friday, March 13, 2015

பார்த்திபன் கனவு...

     யாரோ முதுகைத் தொடுவதை அறிந்து திரும்பிப் பார்த்தாள், காவியா. வயதான தலைமையாசிரியரைப் பார்த்ததும் புன்னைகைத்தாள். ஆனால் அவரோ, அவளது புன்னகையை அலட்சியம் செய்தது, அவளுக்கு அவமானமாக இருந்தது. அவர் தன் மேல் எதோ ஒரு கோபத்தில் இருப்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள்.
“காவியா டீச்சர், இன்னைக்கும் நீங்க சீக்கிரமா போகலானு நினக்காதீங்க. ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அஞ்சு மணிக்குதான் முடியும். உங்க ஆளுகிட்ட சொல்லிருங்க, ஓ.கே?” என்று அவர் ஒரு வெடிகுண்டைப் போட்டது காவியாவுக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஐயோ, இந்த விஷயத்தை அவனிடம் எப்படிச் சொல்வது? ஏற்றுக் கொள்வானா? அவன் பிடிவாதக்காரனாச்சே! ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை. அவனப் பார்க்கல. இன்று திங்கள், ரெண்டு மணிக்கு அவனைப் பார்க்க வாக்கு கொடுத்துட்டேனே. என்னதான் சொல்வது! என மனதில் முணுமுணுத்துக் கொண்டாள், காவியா.
“ஹேலோ, நான் காவியா டீச்சர் பேசறேன். பார்த்திபன கூப்பிடுறீங்களா, அம்மா” என்று அவன் பக்கத்து வீட்டுப் பெண்மனிக்கு தொடர்பு கொண்டாள்.
“ பார்த்திபா, பார்த்திபா, காவியா.. டீச்சர் ஃபோன்ல” என்று தொலைபேசியில் காத்திருந்த அவளுக்கு பார்த்திபனின் அம்மாவின் குரல் கேட்டது.
“ஹேலோ, உங்களுக்கு ஸ்கூல்ல வேற வேலை  இல்லையா? என் பையன கூட்டிட்டு அன்னாடிக்கும் சுத்தறீங்க. அவனும் எதோ கனவு, கினவுனு சுத்தறான். என் கூட அந்தில மரம் வெட்ட வந்தா நாலு காசாவது கிடக்கும். அவன் என்னத்த கிழிக்கப் போறானு நானும் பாக்கறேன்” என்று அந்த அம்மா பேசி முடிக்கும் போது,
பார்த்திபன் பிடுங்கி, “ஹேலோ, சொல்லுங்க. நான் ரெடியாகிட்டேன், இப்ப வரீங்களா” என்று கேட்டான்.
“டேய், சோரி. இன்னிக்கு மீட்டிங் இருக்கு. நான் வர்ற முடியா...” என்று சொல்வதற்குள், படார் என்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது.
இவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வரும்னு காவியாவுக்குத் தெரியும். அதுவும், பந்து விளையாட்டு என்றால் அவனுக்கு உயிர். இன்று பயிற்சிக்குப் போக முடியாது என்றால் அவன் உயிரில் பாதி போன மாதிரிதான்.
“ சிறந்த கோல் கீப்பர் ஆவதுதான் என் கனவு, இலட்சியம் எல்லாமே” என்று மூன்று மாதத்திற்கு முன்பு காவியாவிடம் பார்த்திபன் சொன்னது அவள் கண்முன் வந்து போனது. அவனுடைய ஏழ்மை அதற்கு தடையாக இருந்ததை காவியா அறிந்து கொண்டு அவன்மேல் அதிக அக்கறை காட்டத் தொடங்கினாள். இவளுக்கும் வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்ததால் என்னமோ இவர்கள் இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டானது.
அவள் பணியாற்றும் பள்ளியின் பக்கத்திலேயே பார்த்திபன் வசிக்கும் தோட்டம் இருப்பதால், தன் காரிலேயே அவனை அன்றாடம் பயிற்சிக்காகப் பக்கத்துப் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தாள். பக்கத்து பள்ளியில் காவியாவின் நண்பர் திரு வேலனும், பார்த்திபனின் திறமையைப் பார்த்து தமது அணியில் இணைத்துக் கொண்டார். இரண்டு மாதங்களாக பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்ட பார்த்திபனுக்கு இன்று ஓர் ஏமாற்றம்!
ஏற்கனவே தன் அப்பாவின் இறப்புச் சடங்குக்குத் தன்னையும் தன் அம்மாவையும் வீட்டுக்குள் விடாமல் தடுத்தது அவனுக்கு ஆறாத காயமாக இருந்தது. இரண்டாவது தாரத்தின் மகன் என்பதால் அப்பா வழி இருந்த எந்த சொந்தபந்தமும் இவர்களைச் சீண்டாது இருந்தது, இவனுக்கு மற்றவர் மேல் அதிகப்படியான கோபத்தை உண்டுபண்ணும். பார்த்திபனின் கனவே எப்படியாவது வாழ்க்கையில் புகழ்பெற்ற கோல் கீப்பர் ஆகி, தன் தோட்டத்து மக்கள், சொந்த பந்தங்கள் முன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான். அதற்கு கைக்கொடுத்தவள்தான், காவியா.
மணி பதினொன்றாகியது. காவியாவுக்குத் தூக்கம் வரவேயில்லை. பார்த்திபன் மனதைப் புண்படுத்திவிட்டதாக எண்ணி மனம் கலங்கினாள்.
“அன்னாடிக்கும் ஸ்கூல் முடிஞ்சி லேட்டாதான் வர்ற. உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற யோசனை இல்லையா? அந்த ஸ்கூல்ல போய் உட்காந்துகிட்டு, இதேல்லாம் நல்லாவா இருக்கு?” என்று அம்மா அடிக்கடி கடிந்து கொள்வதைக் காவியா பொருட்படுத்துவதில்லை.
இப்போது அவள் மனதில் இருக்கும் ஒரே கவலை, பார்த்திபன் மட்டும்தான்! இன்னும் 2 நாள்தான் இருக்கிறது, மாநில நீதியில் பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற. இந்த நேரத்தில் பயிற்சிக்கு அவனைக் கூட்டிட்டுப் போக முடியவில்லையே என்ற எண்ணம் அன்று முழுவதும் அவள் சிந்தனைகளில் அலை பாய்ந்தன.
மறுநாள் காலையில் வழக்கத்தைவிட அதிகாலையிலேயே பள்ளிக்குச் சென்று விட்டாள். வந்தவுடனே தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்து, “டீச்சர், இந்தாங்க லட்டு” என்று கையை அவர் முன் நீட்டினாள்.
“ஏன், இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? ஏதும் நல்ல செய்தியா?” என்று புன்னகைத்துக் கொண்டு கேட்டார். அவரிடம் எதாவது கேட்க வேண்டும் என்றால் காவியாவின் ஒரே ஆயுதம் லட்டுதான்!
“டீச்சர்... ம்ம்ம்... இன்னைக்கு பார்த்திபனை கண்டிப்பா கூட்டிட்டுப் போகனும். இன்னைக்குதான் கடைசி பயிற்சி. ஸ்கூல் முடிஞ்சவுடனே கிளம்பனும், அதான்... மீட்டிங் ஏதும் வச்சிருக்கீங்களானு கேற்க வந்தேன்”, என்றாள்.
அதற்குள் தலைமையாசிரியர் வாயினுள்  லட்டு போராடிக் கொண்டிருந்தது! அவர் காவியாவைப் பார்த்து தலையசைத்ததும் காவியாவிற்குப் புரிந்து விட்டது. “ரொம்ப நன்றி, டீச்சர்” என்று ஆனந்தமாக அவர் அறையை விட்டு வெளியேறினாள்.
மணி இரண்டு ஆனதும் காவியாவின் கண்கள் பார்த்திபனைத் தேடிக் கொண்டிருந்தன. அதோ வந்தோ விட்டான், பார்த்திபன்.
“டேய், என்னடா இது! சட்டையா, போர்வையா? உனக்குதான் நான் ஜெஸ்சி வாங்கிக் கொடுத்தேனே! பின்ன ஏன் இவ்வளவு பெரிய சட்டையைப் போட்டுகிட்டு வந்து, என் மானத்த வாங்குற?” என்று கடிந்து கொண்டாள்.
“அந்த ஜெஸ்சி ஈரமா ஆயிருச்சு. பக்கத்து வீட்டு அண்ணன்கிட்ட வாங்கிப் போட்டேன்” என்று கூறியதும், அவள் செல்லமாக அவன் தலையில் தட்டினாள்.
பக்கத்துப் பள்ளிக்கு வந்ததும், சிட்டாக பறந்தான் பார்த்திபன். அவன் திடலில் இறங்கி கோல் கீப்பராகக் காட்சியளிப்பதை, திடலின் ஓரத்தில் இருந்து காவியா இரசித்துக் கொண்டிருப்பாள்.
“ஹாய், காவியா. உங்க ஆள வரச் சொல்லுங்க. சீக்கிரம் பயிற்சி ஆரம்பிச்சாச்சு” என்றார் வேலன்.
“பார்த்திபா, கோல் கோல்... பிடி... பிடி..” என்று  வேலன்,  பார்த்திபனை அடிக்கடி உட்சாகப்படுத்துவார். காவியாவும் அடிக்கடி வேலனிடம் பார்த்திபனின் நிலையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள்.
பயிற்சி நேரம் முடியும் வரை சில பள்ளி வேலைகளையும் தன் மடிக்கணினியைக் கொண்டு அங்கே ஓர் இருக்கையில் அமர்ந்து செய்து கொண்டிருப்பாள்.
“அடிக்கடி காவியா டீச்சர் வேலனைப் பார்க்க வராங்களே. என்ன நடக்குது. ஒரு பொண்ணு இப்படி ஆம்பளங்க இருக்கிற இடத்துல அஞ்சு மனி வரைக்கும் இருந்து அப்படி என்ன தான் வேலை செய்றாங்களோ?” என்று அந்தப் பள்ளியில் அடிக்கடி கிசுகிசுக்கும் சத்தமும் காவியாவின் காதில் விழத்தான் செய்கிறது. இதற்கெல்லாம் இவள் வருத்தப்படுவாளா? அவளுடைய கனவு... பார்த்திபனின் கனவு!
ஐந்து மணி ஆனதும், பார்த்திபனை அவன் வீட்டில் விட்டுட்டு கிளம்பினாள், காவியா. “நாளை வேலன் உன்ன ஏத்திட்டு போவாரு. ராத்திரி விரைவா தூங்கிருடா. சரியா?” என்று கூறி விடைபெற்றாள்.
காலையில் திடலில் கம்பீரமாகக் காட்சியளித்தப் பார்த்திபனைக் கண் இமைக்காமல் பார்த்தாள், காவியா.
“பார்த்திபா.. பார்த்திபா..” என்று இவர்கள் அணியினரின் குரல் மேலோங்கியிருந்தது. காரணம், இறுதி சுற்றில் இப்போது பினால்டி வாய்ப்பு கிடைத்துள்ளது. வெற்றியா, தோல்வியா கோல் கீப்பர் கையில்தானே. இப்போது பார்த்திபன் தான் அந்த அரங்கத்தில் ஹீரோ.
“டேய், பார்த்திபா.. பிடிச்சுருடா.. கோல் மட்டும் விட்றாத” என்று கத்திய காவியாவின் முதுகில் கை வைத்து ஆறுதல் படுத்தினார், அவளது தலைமையாசிரியர்.
“காவியா, பதட்டப்படாதீங்க.”, என்று ஆறுதல் படுத்தியது அவள் காதில் விழவேயில்லை. அவள் கண்கள் பார்த்திபனின் ஒவ்வொரு அசைவினைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.
அவளால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடினாள். கொஞ்ச நேரத்தில் முடிவு தெரிந்து விடும். ஐயோ, பார்த்திபா! பிடிச்சுருடா..ப்லீஸ்!
திடிரென்று திடலில் ஒரே ஆரவாரம்! கண்களைத் திறந்து பார்க்கும்போது பார்த்திபனை வேலனும், அவன் அணியினரும் கட்டித் தழுவினர். காவியாவால் ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடிந்தது.
“இதுவரை உங்கள் அணியில் கோல் புகுத்த முடியவில்லை. அதுவே உங்கள் அணியை ஜெயிக்க வச்சிருக்கு. வாழ்த்துகள், வேலன்” என்று முக்கியப் பிரமுகர் ஒருவர் வெற்றிக் கோப்பையை வேலனிடம் கொடுத்தார்..
“ இன்றைய நிகழ்வின் ஹீரோ.. உங்களுக்கு எல்லாம் தெரிந்ததே.. சிறந்த கோல் கீப்பராக வாகை சூடுவது, ம்ம்ம்... பார்த்திபன்!” என்று அரங்கம் முழுதும் ஒலித்ததை ஓரத்தில் இருந்து கேட்டதும் பரவசமானாள் காவியா.
அதோ பார்த்திபனின் கனவில் முதல் கட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. காவியாக்கு இரண்டு கண்கள் போதவில்லை. மகிழ்ச்சியில் கண்களிலிருந்து நீர் வழிந்ததைக் கூட அவள் உணராது பார்த்துக் கொண்டிருந்தாள்.
தங்கக் கோப்பையைக் கையில் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான், பார்த்திபன். அவன் கண்கள் முதலில் காவியாவைத்தான் தேடின.
ம்ம்ம்... காவியாவை அவன் கண்கள் சந்தித்து விட்டன.
“காவியா டீச்சர்!” என்று கத்திக் கொண்டு அவளை நோக்கி ஓடி வந்தான், அந்தப் பன்னிரெண்டு வயது பாலகன்!