சிறுகதை (படிநிலை 2)
‘கோபி! கோபி!’
என்ற பலத்த குரல் என் செவியில் பாய்ந்தது. அதோ, தூரத்திலிருந்து எங்கள் அணி வெற்றிப்
பெற வேண்டும் என ஆவலாய் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், என் பள்ளி நண்பர்கள்.
ஐயோ, ஒருவன் என்னை நோக்கி பந்தை வேகமாக உதைக்கிறானே! பந்தைப் பிடிக்க வேண்டுமே! கடவுளே!
‘ஐ.....அப்ப்ப்ப்பா..’
எங்கள் அணியைச்
சேர்ந்த மாணவர்கள் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவினர். இறுகிய கண்களைத் திறந்து பார்த்தேன்.
பந்து என் கையில் இருந்தது. மனதிற்குள், ‘அப்பாடா, எப்படியோ, கடைசியில் பந்தைப் பிடித்து
பள்ளிப் பெயரைக் காப்பாத்திட்டேன்’ என்ற எண்ண அலைகள் என் சிந்தனையில் ஓடின.
“கோபி, உன்னால்தான்
இன்று நம்ம அணி மாநில அளவில் ஜெயித்தது,” என்று அணியின் தலைவன் மாறன் கூறியது அப்போது
எனக்குப் பெருமையாக இருந்தது.
என்னதான் போட்டியில்
வெற்றிப் பெற்றாலும், என் மனதிற்குள் நாளையைப் பற்றிய சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
ஆம், நாளைதான் இறுதியாண்டு தேர்வு முடிவுகள். இன்று பெருமை, நாளை???
பொழுது விடிந்ததும்
பள்ளிக்குப் புறப்பட்ட எனக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதோ, என்னை நோக்கி
ஆசிரியர் திரு மாணிக்கம் கோபத்தின் உச்சக்கட்டத்தில் வந்து கொண்டிருக்கிறார். இவரிடம்
நான் வாங்காத அடியே இல்லை!
“கோபி! உன்
தேர்வு முடிவுகளைப் பார்த்தாயா? மொழிப் பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சிப் பெறவில்லை.
படித்து நல்ல நிலையில் வருகிற எண்ணம் இல்லையா உனக்கு? எத்தனை முறை சொன்னாலும் காற்பந்து,
காற்பந்து என்று கிளம்பி விடுவதுதான் உன் வேலையா?” என்று வகுப்பாசிரியர் முறையில் என்னைக்
கண்டித்தார்.
“சார், என்
இலட்சியமே காற்பந்து போட்டியில ஜெயிச்சு உலகத்துல சிறந்த கோல் கீப்பர் ஆவதுதான்’ என்று
மனதில் புதைந்திருந்த வேட்கையைக் கூறினேன்.
என் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் சிந்தியது; ஆனால் ஆசிரியர் பதில் ஒன்றும் கூறாமல்
அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். நான் ஏதும் அவரை மதிக்காமல் பேசிவிட்டேனா என்ற வருத்தம் எனக்குள் தோன்றியது.
மறுநாள் பள்ளிப்
பரிசளிப்பு விழா. எல்லா மாணவர்களும்,, பெற்றோர்களும் திரளாக மண்டபத்தில் குழுமியிருந்தனர்.
நிகழ்வின் அறிவிப்பாளராக ஆசிரியர் மாணிக்கமே காட்சியளித்தார்.
திடீரென்று
அவர் கூறிய அறிவிப்பு என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. “பள்ளியின் சிறந்த கோல்
கீப்பர் மற்றும் இளம் விளையாட்டாளர் விருதைத் தட்டிச் செல்ல செல்வன், கோபியை மேடைக்கு
அழைக்கிறேன்,’ என்றார். அனைவரின் கைத்தட்டலும் எனக்குள் ஒரு பெருமிதத்தை அளித்தது.
தூரத்திலிருந்து பார்க்கும்போது என் பெற்றோர்கள் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும் காட்சி
தெரிந்தது.
“சிறந்த கோல்
கீப்பராக தேர்வுப் பெற்ற உன்னை மேலும் பயிற்சிக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க அரசாங்கம்
முடிவு செய்துள்ளது, வாழ்த்துகள் கோபி!” என்று மாவட்டக் கல்வி அதிகாரி என் கையைக் குலுக்கிக்
கூறுயது கனவா, நினைவா என்று ஒரு கணத்தில் யோசித்தேன். ‘அட ஆண்டவனே, இவ்வளவு நாள், நான்
செய்த பயிற்சி, என் முயற்சி என்னைக் கை விடவில்லை,’ என்று என் மனமே எனக்கு உறுதி கூறியது.
ஒரு வாரம்
கழித்து.... இப்போது நான் விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறேன். என் பெற்றோர்களின்
கண்களில் ஆனந்தத்துடன் கலந்த கண்ணீர் வடிந்தோடியது. அவர்களைப் பிரிந்து போவது எனக்கும்
வருத்தம்தான், இருந்தாலும் என் இலட்சியம் என் கண் முன் காட்சியளிக்கின்றது. மனதைக்
கட்டுப் படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். என் முதுகை யாரோ தொடுவது போல் இருந்தது.
திரும்பிப்
பார்த்தேன்.... “சார், நீங்களா?”
“ வாழ்த்துகள்,
கோபி! வகுப்பாசியர் என்ற முறையில் என்னுடைய சிறு அன்பளிப்பு”, என்று கூறி கையில் வைத்திருந்த
பையை எனக்குக் கொடுத்தார்.
“நன்றி சார்”,
என்று மட்டுமே என்னால் அப்போது கூற முடிந்தது. பயணிகளை அழைக்கும் குரல் கேட்டுவிட்டது.
அனைவரிடமிருந்து விடைபெற்று பயண இருக்கையில் அமர்ந்தேன். அமெரிக்காவை நோக்கிப் போகப்
போகிறேன். விமானம் புறப்படத் தயாராகிவிட்டது. கண்களைச் சிறிது நேரம் மூடிக் கொண்டேன்.
சில மணி நேரங்கள்
கழித்து, கையில் இருந்த பையைத் திறந்து பார்த்தேன். எனக்காக ஆசிரியர் என்ன வாங்கியிருப்பார்????
அதில் காற்பந்து காலணி காட்சியளித்தது. எனக்கு
அப்போது பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை ; கண்களிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வந்தது.
பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.
1. பள்ளி அணியிணர் கோபியைக் கட்டித் தழுவியதன் காரணம் என்ன?
A. கோபி கோல் புகுத்தியதால்
B. கோபி கோலை விட்டதால்
C. கோபியால் அணி வெற்றிப்
பெற்றதால்
D. அவர்களது அணி வெற்றிப்
பெற்றதால்
2. ஆசிரியர் கோபியைக் கண்டித்ததன் காரணம் என்ன?
A. விளையாட்டில் வெற்றிப்
பெற்றதால்
B. முறையாகப் பாடம் செய்யாததால்
C. மொழிப் பாடங்களில் தேர்ச்சிப்
பெறாததால்
D. பள்ளிக்கு வராததால்
3. பின்வருபவனவற்றுள் எது கோபியின் பண்புகளைக் குறிக்கவில்லை?
A. இலட்சியம் உடையவன்
B. ஆசிரியரின் மீது மரியாதை
உடையவன்
C. முயற்சி செய்து படிப்பவன்
D. விளையாட்டுப் பயிற்சியில்
ஆர்வம் உடையவன்
4. வகுப்பாசியர் திரு. மாணிக்கத்தின் பண்புகள் யாவை?
I படிப்பில் அக்கறை கொண்டவர் II கண்டிப்பானவர்
III மாணவர்களின் நலம் கருதாதவர் IV ஊக்குவிக்காதவர்
A. I, III
B. I, II, IV
C. I, II
D. II, III, IV
5. ‘வேட்கை’ எனும் சொல்லின் பொருள் யாது?
A. எண்ணம்
B. திருப்தி
C. ஆசை
D. வருத்தம்
No comments:
Post a Comment