மனிதர்களின் அருஞ்சாதனைப் படைப்புகளில் ஒன்று மொழி. மனிதர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முக்கிய சாதனமாகத் திகழ்வது மொழி என்று கூறினால் அது மிகையாகாது. மனிதனின் மொழியானது இவ்வுலக உயிர்கள் அனைத்தைக் காட்டிலும் சிறப்புடையது. மனிதர்கள் புரியும் செயல்களுக்கு அடையாளக் குறியீடுகளைக் கண்டுபிடித்து, அவற்றுக்கெல்லாம் பொருண்மை தன்மையைக் கொடுத்து, பின் அவற்றைச் செம்மைப் படுத்தி நற்சொற்களாக படைத்துக் கொடுத்தாக கூறப்பட்டுள்ளது.
பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியின் வாயிலாகவே நமது எண்ணங்களையும், கருத்துகளையும் பிறரிடம் தெரிவிக்க முடிகிறது. மனிதர்களைப் போலவே மற்ற விலங்குகள், பறவைகள், பூச்சி இனங்கள் அனைத்திற்கும் மொழிகள் உள்ளன. இனி மனிதர்களின் மொழிக்கும் மிருகங்களின் மொழிக்கும் உள்ள வேறுபாட்டினை ஆராய்வோம்.
மனிதர்கள் அல்லது மனிதருக்கு முன் தோன்றிய விலங்கினங்கள் மட்டும் தொடர்பு கொண்டன என்று நம்மால் சொல்ல முடியாது. உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒவ்வொரு செய்தி பரிமாற்றமும் (அதாவது குறிகளை அனுப்புபவருக்கு உயிர் இருக்கலாம், செய்தி பெறுபவர் எதோ ஒரு உருவமாக இருக்கலாம்) தொடர்பு கொள்ளுதலாகும். இதனால், விலங்கினங்களின் நடத்தையை பற்றிய படிப்பில் விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் என்ற ஒரு பிரிவும் இடம் பிடித்துள்ளது. கோரல் போன்று முற்பட்ட காலத்தில் தோன்றிய விலங்கினங்கள் கூட தொடர்பு கொள்வதில் வல்லமை பெற்றிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் நுண்ணுயிர்களும் தங்களுக்கிடையே குறிகள் காட்டிக் கொள்கின்றன. நுண்ணியிர்கள் தொடர்பு கொள்ளுதலைத் தவிர பாக்டீரியா போன்ற முற்காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற இரசாயனங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன. இதே போன்று செடிகள் மற்றும் பங்கஸ் வகைகளும் தகவல் தொடர்பு கொள்ளுதல் நடைபெறுகிறது. குறிகளைக் கொண்டு நடைபெறுகின்ற இந்த தொடர்பு முறைகள் துல்லியமான வேறுபாட்டுடன் ஒரு நிலைப்படுத்தப் படுகிறது.
ஒரு விலங்கின் நடத்தை நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் என்று நாம் குறிப்பிடலாம். விலங்குகள் தொடர்பு கொள்ளுதலை விட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானது. மனிதனின் மொழியானது முழுமையான கருத்தாடல் நிகழ்த்த பயன்படுகிறது. இவ்வியல்பு விலங்குகளின் மொழியில் கிடையாது. மனிதர்களால் தாங்கள் சொல்ல வந்த கருத்தையும் பிறரிடமிருந்து கிடைக்கும் பதில்களையும் முறையாகவும், தெளிவாகவும் உணர முடிகிறது.
மிருகங்களான ஆடு, மாடு, பறவைகள், பாம்பு, மீன்கள் போன்றவைகளின் மொழிகள் வேற்பட்டுள்ளன. இவைகள் குறிப்பிட்ட உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. அவ்வாற்றல்களை தொடும் வாயிலாகாவும், ஓசைகள் எழுப்பும் வாயிலாகவும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் மனிதர்களின் மொழி, முழுமையானது. மனிதர்கள் தங்களது உணர்வுகளை மொழியைப் பயன்படுத்தி பேசுகின்றனர். பேச இயலாதவர்கள் செய்கையின் மூலமாக மற்றவர்களுக்குத் தெரிவிக்கின்றனர். ஆகவே மனிதர்களின் மொழியாற்றலானது முழுமையானது.
தொடர்ந்து, மனிதனின் மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளது. ஆனால், மிருகங்களின் மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. மனிதர்கள் பல இனத்தவர்கள் என்பதால் ஒவ்வொர் இனத்தவருக்கும் பல்வேறு மொழிகளும், எழுத்துகளும் உள்ளன. ஆனால் மிருகங்களின் மொழிக்கு ஒலிகள் மட்டுமே உள்ளது. உதாரணமாக பசு தன் கன்றோடு தொடர்புக் கொள்ளவும், தன் முதலாளியோடு தொடர்புக் கொள்ளவும் வெவ்வெறு ஒலிகளைப் பயன்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மிருகங்கள் குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமே எழுப்ப முடியும். ஆனால் மனிதன் வெவ்வேறு இனத்தவர்களிடம் தொடர்பு கொள்ள பல மொழிகளைக் கற்றுக் கொள்கிறான். விலங்குகளின் தன்மைகளுக்கு ஏற்ப அவற்றின் அசைவுகள், ஒலிகள், உணர்ச்சிகள் வேறுபடுகின்றன. பாம்பு, குருவி, தேனீ போன்ற மிருகங்களின் மொழியானது ஓசைகளாக இருக்கின்றன. மீன், திமிங்கலம், லோல்பிம் போன்ற நீரில் வாழும் விலங்குகளின் மொழிகள் மாறுபடுவதால் விலங்குகள் தங்களுக்கிடையே தொடர்புக் கொள்வது மிகவும் சிரமம். மனிதர்களின் மொழிகளை எடுத்துக் கொண்டால், வெவ்வேறு ஒலிப்புமுறை, எழுத்து முறையில் மாறுபட்டிருந்தாலும் மனிதர்களுக்கிடையே எதாவது ஒரு மொழியின் மூலம் சுலபமாகத் தொடர்புக் கொள்ள முடிகிறது. உதாரணமாக ஜப்பான் மொழியினர், வெள்ளைக்காரர்களிடம் தொடர்பு கொள்ள ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றனர்.
மனிதர்களின் மொழியின் பயன்பாடு, மிருகங்களைக் காட்டிலும் பரவலானது. மனிதர்கள் மொழியைக் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு, வணிகத் துறை, கல்வித்துறை, தொழிற்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மிருகங்கள் குறிப்பிட்ட உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த மொழிகளையும், ஓசைகளையும் எழுப்புகின்றன.
ஆகவே மனிதர்களின் மொழியானது மற்ற உயிரினங்களைக் காட்டிலும் தனித்துவமிக்கது என்று கூறலாம். விலங்குகளின் மொழியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது வளர்ச்சிக் கண்டுள்ளதால் அவற்றின் தொடர்பு முறையைப் பற்றிய செய்திகள் இனி பரவலாக கிடைக்கக்கூடும் என்பதையும் அறியலாம். விலங்குகளின் மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தற்காலத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதால் மேன்மேலும் அவற்றின் மொழிகளைப் பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
2. மொழியியல் வளர்ச்சிக்குத் தென்னாட்டவர்களின் பங்களிப்பை ஆராய்க.
மொழியியல் வளர்ச்சிக்குப் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்களில் மொழியியலைப் பற்றிய ஆராய்ச்சியில் முதன்மை இடத்தைப் பிடிததவர்கள் கிரேக்கர்களே. மேலும் ரோமர்கள், அரேபியர்கள், மற்றும் இந்திய பெருநிலத்தைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள் என்று வரலாறு உரைக்கின்றது.
இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில் மிகுதியாகத் தோன்றியுள்ளன. நீண்ட வரலாற்றில் அரசாட்சி, பிறமொழிகளின் தாக்கம், சமூக மாற்றம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும் இலக்கியமும் மாறியது. எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப் புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம் ஆனது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன. எனவே தமிழில் இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம்.
மொழியியல் துறை வளர்ச்சிக்கு வடநாட்டைச் சேர்ந்த யாக்ஸர், பாணினி, காட்யாயம், பதாஞ்சலி போன்றோர் ஆவர். இவ்வரிசையில் தென்னாட்டைச் சேர்ந்த தொல்காப்பியர், புத்தமித்ரனார், பவணந்தி போன்றோரும் மொழியியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழந்தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை இயற்றியவரின் பெயர் தொல்காப்பியர் ஆவார். மிகத் தொன்மை வாய்ந்த இந்நூலானது இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூலாகத் திகழ்கிறது.
தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம், தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இது நுன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளி மயங்கியல் மற்றும் குற்றுயலுகரப் புணரியல் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.
இரண்டாவதான சொல்லதிகாரம், மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், மற்றும் எச்சவியல் ஆகும்.
அடுத்ததாக பொருளதிகாரமானது, எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ் மரபையும் விளக்குகிறது.. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. அவை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல் மற்றும் மரபியல் ஆகும். எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைப் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆகவே மொழியியல் ஆய்விற்கு தொல்காப்பியமானது பழங்காலத்து மக்களின் பேச்சு மொழிகளையும் வாழ்வியல் கூறுகளையும் வழங்கியுள்ளது.
வீரசோழியம்
சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாக வீரச்சொழியம் திகழ்கிறது. சமஸ்கிருத மொழியின் செல்வாக்கு அதிகரித்ததால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.
இந்நூல் சோழர் காலத்தில் தமிழ் மொழி வழக்கினை தெளிவான முறையில் விளக்கியிருப்பதால், தமிழ்மொழியின் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்திருக்கும் மிகச் சிறந்த நூலாக இந்நூல் திகழ்ந்தது
குறிப்பிட்ட இடத்தில் இன்ன உடம்படுமெய்தான் வரவேண்டும் என்று விதித்தது இந்நூல் மூலமே. மேலும், முன்னுயிர்களைச் சொற்களின் ஈற்றில் கொண்டு முடியும் சொற்களோடு இன்னொரு உயிரை முதலாகக் கொண்ட சொல் புணரும்போது ‘ய’கர உடம்படுமெய் தோன்றும். ஏனைய உயிர்களின் முன், ‘வ’கர உடம்படுமெய் தோன்றும் என்ற விதியினை இவ்விலக்கண நூலின் மூலம் கிடைக்கப்பெறும் கொடையாகும்.
நன்னூல்
பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல். தில் 462 நூற்பாட்களைக் கொண்டது. இது, எழுத்திலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களைப் பற்றி விளக்குகிறது. நன்னூல் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச்சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். தொல்காகாப்பியத்திற்கும், வீரச்சொழியத்திற்கும் பின் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன. பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக் கற்றுத் தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத் தரும் முறை, மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறைஆகியவை இடம் பெற்றிருக்கும்.
நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர்,சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்து வருகின்றனர்.
தமிழ்மொழியில் இருக்கும் அனைத்து சொற்களையும் இனம் பிரித்து, பகுக்கக்கூடிய மற்றும் பகுக்க முடியாத சொற்களாக அமைத்துக் காட்டியது இந்நூலே. ஆகவே தமிழ் சொற்களைப் பகுபதம் மற்றும் பகாப்பதம் என இரு வகையாகப் பிரித்துக் காட்டுகிறது.
ஆகவே, தென்னாட்டவர்களின் இலக்கணப் பணியானது மொழியியல் வளர்ச்சிக்கு மேன்மேலும் துணைபுரிந்தது என்பதை உணர முடிகின்றது.
3. தமிழ் எழுத்துகளின் பரிணாம வளர்ச்சியை ஆராய்க.
உலகத்தில் தோன்றிய பல மொழிகள் இன்று வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஓர் இனம் வாழ்ந்ததன் அடையாளம், அவர்களின் மொழி என்று கூறினால் அது மிகையில்லை. அத்தகைய தொன்மை வாய்ந்த மொழிகளில் நம் தமிழ்மொழியும் நீண்ட வரலாற்றைக் கொண்டு சிறப்புறுகிறது. தமிழ்மொழியின் எழுத்து அமைப்பு முறையானது பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. இவற்றை இலக்கண ஆசிரியர்கள் ஏற்படுத்திய மாற்றங்களின் வழி காணலாம். தமிழ் எழுத்தானது உரு, உணர்வு, ஒலி, தன்மை என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. தமிழ்மொழி எழுத்துகளின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் இனி காண்போம்.
சிந்து சமவெளி
மொழி அறிஞர்கள் சிந்து சமவெளியே தமிழ் எழுத்துகளின் பிறப்பிடம் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி எழுத்துகளின் மொழி, இந்தோ-ஆரியம் என்றும், பழந்தமிழ் என்றும், முண்டா மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்றும் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன. இருப்பினும் அறிஞர்களான எமனோ, பாஸ்சம் ஆகியவர்கள் இவை தொல்திராவிட மொழிக்குச் சொந்தமானவை என்று பரைச்சாற்றுகின்றனர். சிந்து சமவெளியில் உருவான எழுத்துகளுக்கு வடிவங்கள் காணப்படவில்லை, மாறாக குறியீடுகளே காணப்பட்டன.
பிராமி
அசோகர் காலமான கி.மூ300, மொழி ஆய்விற்கு சிறந்த காலமாக திகழ்ந்தது. இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் மற்றும் வரைபடங்கள் உருவாகின்றன. இவையே பின் பல்வகை எழுத்துகள் உருவாகுவதற்கு வழிவகுத்தன. இவ்வரிசையில், தமிழ் எழுத்துகள் பிராக்கிருத மொழியில் ‘தாமலி’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்வெழுத்து முறையை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் ஜைன சமயத்தவர்கள் ஆவர்.
தே³வாநம்ʼ பியே பியத³ஸீ லாஜா ஹேவம்ʼ ஆஹா
அம்ʼநத அகா³ய த⁴ம்ʼம காமதாய அகா³ய பல [...]
அவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்தவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.
தமிழ் பிராமி
தமிழ் பிராமி என்றழைக்கப்பட்ட பிராமி எழுத்து, கி.மூ 4-3ஆம் நூற்றாண்டு முதல் ஆதிக்கம் செய்யத் தொடங்கியது என்று பூலாங்குறிஞ்சி கல்வெட்டு விளக்குகிறது. இக்கல்வெட்டுகளில் எழுத்துகள் புள்ளி இட்டும், இடாமலும் இரு வகையாக அமைந்துள்ளன. ஆகவே வடமொழியில் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்தும் தமிழ் பிராமி எழுத்தும் வேறுபட்டுள்ளது எனலாம். இவ்வெழுத்துகளைத் தமிழ்மொழிக்கு ஏற்றவாறு பல முயற்சிகள் கையாளப்பட்டது.
தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்தது. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. ஆனால், ஓர் எழுத்து மெய்யோ, அல்லது அகர உயிர்மெய்யோ என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் மற்றும் எ’கர ஒ’கரங்களையும் குறிக்க புள்ளி உருவாக்கப்பட்டது. இதன் விளைவாகவே ‘ற, ழ, ன, ள ,க’ ஆகிய தமிழ் எழுத்து முறைகள் உருவாகியுள்ளன. இவ்வாறு பல மாற்றங்களைக் கொண்டு வளர்ச்சியடைந்த தமிழ் பிராமி எழுத்துகள், நம் மொழி வளர்ச்சியினில் சிறப்பிடம் பெறுகின்றது.
வட்டெழுத்து
தமிழ் பிராமி எழுத்தானது பின் பல்வேறு மாற்றங்களை எதிர்நோக்கியது. கற்களில் எழுதப்படுவதை மாற்றி பின் ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு வசதியாக தமிழ் பிராமி வட்ட வடிவமாக உருமாற துவங்கியது. வட்டெழுத்து உருவான அதே கால கட்டத்தில், வடமொழி எழுதுவதற்காக பிராமியில் இருந்து பல்லவ கிரந்தம் என்ற எழுத்து பல்லவர் காலத்தில் தோன்றியது. வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.
தமிழ் வட்டெழுத்துகள் கி.பி 8-9ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு படிப்படியாக குன்றி. பிறகு நவீன தமிழ் எழுத்துக்களின், மூலமான பல்லவ-தமிழ் எழுத்துக்களால் முழுமையாக தமிழ் எழுதப்பட துவங்கியது. இருப்பினும் பிற்காலத்தில், ‘ப, ம, ய, வ’ ஆகிய எழுத்துகள் வடிவத்தில் சிறு மாற்றத்தோடு எழுதப்பட்டன. மேலும் மெய்யெழுத்துகளும் புள்ளியிட்டு எழுதபட்டன. ‘ண, த, ற’ ஆகிய எழுத்துகளின் வடிவங்களும் மாற்றங்களைக் கண்டன. இருப்பினும் மக்களுக்குப் புரியாத நிலை ஏற்பட்டதால் மேலும் புதிய வடிவம் வந்தது.
பல்லவ தமிழ்
வட்டெழுத்து தனித்துவம் பெற்று வளர்ந்த சூழலில் மேலும் ஒரு எழுத்து வடிவம் வளர்ச்சிக் கண்டது. கி.பி.8-9ஆம் நூற்றாண்டில் பல்லவ கிரந்தத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியதே பல்லவ-தமிழ் எழுத்துகள். இன்றைய தமிழ் எழுத்துமுறையானது பல்லவ எழுத்து முறையின் அடித்தளமே. பல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இவ்வெழுத்துகளில் புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காண இயலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால், எகர ஏகார ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.
எழுத்துச் சீர்த்திருத்தம்
தமிழ்மொழியின் எழுத்துகளானது பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்ச்சியையும் கண்டது. பல்வேறு காலகட்டங்களில் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்தனர். கி.பி 18-ஆம் நூற்றாண்டிம் வீரமாமுனிவ காலகட்டத்தில், எ’கர, ஒ’கர குறில் எழுத்துகளுக்கும் அதன் இணைப்போடு உருவாகும் மெய்யெழுத்துகளுக்கும் புள்ளி இடும் வழக்கம் தொடர்ந்தது. அதே போல, எ, ஒ முதலிய குறில்களும் புள்ளி பெற வேண்டி இருந்தது. புள்ளி பெறாதது நெடில்களாக கருதப்பட்டன.
இவ்வெழுத்துகளைப் போன்றே ஏ’கார, ஓ’கார நெடில் எழுத்துகளுக்கு இரட்ட்டைக் கொம்பினையும் அறிமுகம் செய்தார். ‘ர’கர எழுத்தும் சாய்வுக்கோடு பெற்று சீர்த்திருத்தப்பட்டது.
தற்காலத் தமிழ் எழுத்து
தற்காலத் தமிழ் எழுத்துகள் பல சீரமைப்பிற்குப் பின் சில மாற்றங்களோடு வலம் வருகின்றன. எம்.ஜி.இராமச்சந்திரன் (தமிழக முதல்வர் 1986) அவர்கள், சில எழுத்து சீர்த்திருத்தங்களை அறிவித்தார். ஆகார, ஐகார, ஏகார, ஓகார மெய்களோடு இணையும் இடையின மெல்லின ன,லகரங்களும் எழுத்து வடிவங்களில் மாற்றம் செய்யப்பட்டன. ல,ள,ன,ண முதலான மெய்க்குறிகளையும் மாற்றியமைத்து, ஐகாரக் கொம்பினை அமலாக்கம் செய்தார்.
இவ்வாறாக செம்மொழியான தமிழ்மொழி பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது.
4. கீழ்க்காண்பனவற்றூக்குச் சிறுகுறிப்பு எழுதுக.
(அ) ஒலியியல்
மொழியின் அனைத்து இயல்புகளையும் பற்றிய அறிவியல் அடிப்படையிலான கல்வி மொழியியல் (Linguistics) என்றழைக்கப்படுகிறது. மொழியின் மனிதர்களாகிய நாம் பேசும்போது பல்வேறு ஒலிகளை எழுப்புகிறோம்.
ஒரு மொழியில் இடம் பெறும் அனைத்து ஒலிகளையும் ஒலி (Phone) என்றே கொள்ளலாம். ஒலியியல், பேச்சில் பயன்படும் எல்லா ஒலிகளையும் (Phones) கணக்கில் கொண்டு அவற்றை வகைப்படுத்தி ஆராய்கிறது. பேச்சொலிகள் பிறக்கும் முறை, அவை பரப்பப்படும் முறை மற்றும் கேட்கப்படும் முறை ஆகியவை ஒலியியலில் ஆராயப்படுகிறது.
இவ்வாறு ஒருமொழியில் உள்ள அனைத்து ஒலிகளையும், அவை உச்சரிக்கப்படும் முறையில் உள்ள வேறுபாட்டுணர்வுடன் கருத்திற் கொள்ளுவதே ஒலி பற்றிய சிந்தனையாகும். இங்கு வரிவடிவம் பற்றிய சிந்தனையோ அவை சொல்லாக உருவாகும் முறையோ, பொருள் தரும் முறை போன்றவற்றை கருத்தில் கொள்வதில்லை. இவ்வாறு ஒலிகள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன என்ற நோக்கில் அவற்றின் தன்மையை விளக்கும் இயலே ஒலியியல் ஆகும். ஒலியியல் பேச்சுறுப்புகள், அவை மொழி ஒலிகளைப் பிறப்பிக்கும் முறை, பிறக்கும் ஒலிகளின் தன்மைகள், ஒலிகளின் வகைகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவது. ஒலிகளின்
பிறப்புக் குறித்த கருத்துகளைத் தொல்காப்பியர் ‘பிறப்பியலில்’ விளக்குகிறார். .
(ஆ) ஒலியனியல்
நாம் பேசும்போது காணப்படும் மிகச் சிறிய பொருள் பொதிந்த ஒலிகளையே ஒலியன்கள் என்கிறோம். ஒரு மொழிக்குத் தேவைப்படும் அடிப்படைப் பேச்சொலிகளைப் பற்றி ஆராய்வதே ஒலியனியலாகும். மேலும், மொழியில் உள்ள, பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாகும் அடிப்படை ஒலி மட்டுமே ஒலியன் (Phoneme) என்று கொள்ளப்படும். அதாவது, ‘குடை, கூடை’ எனும் சொற்களில் உள்ள கு -கூ என்னும் ஒலிகளே சொற்களின் பொருளை மாற்றுகின்றன. ‘கலை, களை’ எனும் சொற்களில் ‘ல’கரமும் ‘ள’கரமுமே பொருள் வேறுபாட்டுக்குக் காரணமாக உள்ளன. இவ்வாறு சொற்களில் பொருள் வேறுபாட்டுக்குக் காரணமாக அமையும் ஒலிகளே ஒலியன்கள் ஆகும்.
ஒலியன்கள் பேச்சொலிகளின் அமைப்பு முறைகளைப் பற்றியே பேசுகின்றன. பேச்சு மொழியில் பல மாற்றங்களை ஏற்படுத்துவது ஒலியன்களே. ஒலியன்களில் இயல்புகளை ஆராயும்போது உயிர், மெய், இணைவுயிர், அசை, மாற்றொலி, மேற்கூற்றொலியன் என்று ஆராய்ந்து காட்டும் ஆய்வு இதில் முக்கிய இடம் வகிக்கின்றது.
(இ) உருபனியல்
பேச்சொலியில் உருபன்கள் தனித்து நின்று பொருள் மாறுபாட்டினை ஏற்படுத்துவதால் ஒலியன்கள் என்கிறோம். அத்தகைய ஒலியன்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோ இணைந்து, சொல் அல்லது இலக்கணப் பொருளை வழங்கினால் அவை உருபன்கள் என்றழைக்கப்படுகின்றன. அத்தகைய உருபன்களின் தனிச்சிறப்புகள், எவ்வாறு பாகுபடுத்துவது என்பதை ஆராய்வதே உருபனியல் ஆகும். இதனை ராபின்ஸ், சொற்களின் இலக்கண அமைப்பு முறையைப் பற்றி ஆராயும் துறை என்கிறார்.
உருபனியல் சொற்களின் அமைப்பு முறையையும், அதன் அளவுகளையும் ஆராய்கின்றது.
தமிழ்மொழியில் எடுத்துக் கொண்டால் மூன்று வகைகளாக சொற்பகுப்பு முறையைக் காணலாம். மரபிலக்கண ஆசிரியர்கள், பிற்கால மரபிலக்கண ஆசிரியர்கள், மற்றும் தற்கால மொழியியளாளர் வழங்கிய சொற்பகுப்புமுறைகள் ஆகும்.
(ஈ) தொடரியல்
தொடரியல் என்பது ஒரு சொற்றொடரில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்படுத்துகின்ற, விதிகள், அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். ஒலி பின் அசையாகி பின் உருபனாகி, மேலும் அவற்றின் தொடர்ச்சியால் எவ்வாறு தொடர்களாகவும், வாக்கியங்களாகவும் உருவாகின்றன என்பதைப் பற்றி இத்தொடரியலில் காணலாம். இது, வெவ்வேறு சொற்கள் எவ்வாறு இணைந்து துணைத்தொடர்களாகவும் அவை இணைந்து எவ்வாறு சொற்றொடர்களாகவும், உருவாகின்றன என்பது பற்றிக் கவனத்தில் கொள்கிறது. சொற்றொடரியல் விளக்கமுறை இலக்கணத்தை ஒழுங்குபடுத்த முயல்கிறது.
மொழிகள் அனைத்திலும் காணப்படும் தொடர், வாக்கிய அமைப்பு விதிகளை இவ்வாய்வு பகர்கின்றது. இவ்வாய்வில் தொடர், சொற்றொடர்களின் கூறு மற்றும் வாக்கியம் ஆகிய முக்கிய மூன்று கூறுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று அல்லது மேற்பட்ட சொற்களையே தொடர் என்கிறோம். தொடரியலில் சொற்றொடர் ஒரு சொல்லாகவும், ஒரு தொகைச் சொல்லாகவும் வரலாம். மாறாக ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்களால் உருவாகுவதே சொற்றொடர்க்கூறு எனப்படுகிறது. மேலும் சொற்றொடர், சொற்றொடர்க்கூறுகள், சொல் ஆகிய கலவைகளே வாக்கியம் எனலாம்.
(உ) பொருண்மையியல்
உலக மொழிகள் அனைத்தும் பொருள் பொதிந்த சொற்களையே கொண்டிருக்கின்றன.மொழிகளில் காணப்படும் சொற்கள் வெளிப்படுத்தும் பொருண்மை மாற்பட்டு இருந்தாலும் அவை குறிப்பிட்ட முறைகளைக் கொண்டே மாறுபடுகின்றன என்பதை பொருண்மையியலில் விளக்கப்பட்டுள்ளது.
மக்களின் இனம், கலாச்சாரத்தைக் கொண்டு பொருள் தரும் சொற்கள் எவ்வாறு மாறுபடுகிறது எனவும், அவற்றின் இயல்புகளையும், அவை குறிக்கும் பொருள்களையும், அவற்றின் காரணங்களையும் அடையாளம் காட்ட இவ்வியல் துணைபுரிகின்றது. தற்போது நம் தமிழில் பேச்சு வழக்கில் துணி ‘மடிப்பது’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுவே ‘மடிக்கணினி’ என்ற சொல்லிலும் ஒரே ஓசையுடைய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சொல் சூழலுக்கேற்ப பொருள் மாறுபட்டு வருவதைக் காணலாம்.
மேற்கோள் நூற்பட்டியல்:
மோகனதாஸ் இரா. 2005. அடிப்படைத் தமிழ் இலக்கணம். கோலாலம்பூர்,
மலாயாப் பல்கலைக்கழகம்
இணையத் தளம்: